பிரார்த்தனை தான் வணக்கம்
இவ்வுலகில் வாழும் மனிதர்களில் எவரும் அனைத்து நலன்களையும் பெற்றவர்களாக இல்லை. தான் விரும்பிய, ஆசைப்பட்ட அனைத்தையும் பெற்ற ஒரே ஒரு மனிதரைக் கூட உலகில் காண முடியாது. மிக உயர்ந்த பதவியைப் பெற்றவர் அனைத்து இன்பங்களையும் பெற்று மன நிறைவான வாழ்க்கை வாழ்கிறார் என்று மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால் அவரது வாழ்க்கையில் நுழைந்து பார்க்கும் போது அவருக்கு வாரிசு இல்லை என்ற மனக்குறையோ, அல்லது பெயரைக் கெடுப்பவனாக வாரிசு பிறந்து விட்டானே என்ற மனக்குறையோ, மனைவியால் மகிழ்ச்சி இல்லையே என்ற மனக்குறையோ, விரும்பியதை உண்ண முடியவில்லையே என்ற மனக்குறையோ, இன்னும் இது போன்ற நூற்றுக் கணக்காண குறைகள் அவருக்கு இருப்பதை அறிய இயலும் அளவின்றி பெருஞ்செல்வத்தைப் பெற்றவர், உடல் வலிமை பெற்றவர், மழலைச் செல்வங்களைப் பெற்றவர், இன்னும் எத்தனையோ பாக்கியங்கள் பெற்றவர்கள் மகிழ்வோடு வாழ்கிறார்கள் என்று மற்றவர்கள் கருதலாம். ஆனால் அவர்கள் அனைவருமே தங்களுக்குக் கிடைக்காத பாக்கியங்களைப் பட்டியல் போட்டுக் கவலையில் ஆழ்ந்திருப்பார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் நிறைவேறாத ஆசைகள் இருக்கும். நினைத்தது கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருக்கும்.
இவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் பிரார்த்தனை தான். சர்வ வல்லமையுடைய இறைவனிடம் அந்தக் குறைகளை முறையிடும் போது கோரிக்கைகள் நிறைவேற வாய்ப்பிருக்கிறது. அப்படி நிறைவேறாவிட்டால் கூட, பெரிய இடத்தில் பிரச்சனையை ஒப்படைத்து விட்டோம்; அவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் மன அமைதியை ஏற்படுத்துகிறது.
இதனால் தான் இஸ்லாம் பிரார்த்தனைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக