இறைவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும்

 


இறைவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும்


நம்முடைய இயலாமையை உணர்ந்து நம்மை விட வலிமை மிக்க இறைவனிடம் முறையிடுவது தான் பிரார்த்தனை என்ற அடிப்படையைக் கூட விளங்காதவர்கள் மனிதர்களில் அதிகம் உள்ளனர்.


தாங்களாகக் கற்பனையாகச் செதுக்கிக் கொண்ட கற்சிலைகளிடம் முறையிடுவோர் உள்ளனர். நம்மை விட கோடானு கோடி மடங்கு தாழ்ந்த நிலையில் தான் அந்தக் கற்சிலைகள் உள்ளன என்பதை அவர்களின் பகுத்தறிவு சொன்னாலும் அதை அலட்சியப்படுத்துகின்றனர்.


இறந்தவர்களைப் புதைத்து விட்டு, அங்கே அடக்கம் செய்யப்பட்டவரிடம் பிரார்த்திப்பவர்களும் உள்ளனர். அவரால் எதுவும் செய்ய முடியாது என்பதற்கு அவர் இறந்ததே அசைக்க முடியாத சான்றாக இருந்தும் அதைக் கண்டு கொள்ள மறுக்கிறார்கள்.


உயிருடன் வாழும் மகான்கள் எனப்படுவோர் நம்மைப் போலவே உண்பவர்களாக, மலத்தை வயிற்றுக்குள் சுமந்தவராக, நோய், கவலை, முதுமை உள்ளிட்ட எல்லா பலவீனமும் கொண்டவராக இருப்பது பளிச்செனத் தெரிந்தும் அதைக் கவனத்தில் கொள்ளாமல் அவர்களிடமே பிரார்த்தனை செய்பவர்களையும் நாம் பரவலாகக் காண்கிறோம்.


இன்னும் மிருகங்கள், பறவைகள் மற்றும் அற்பத்திலும் அற்பமான படைப்புகளிடம் பிரார்த்தனை செய்வோரும் மனிதர்களில் உள்ளனர்.


இவை அத்தையும் இஸ்லாம் வன்மையாக மறுக்கிறது.


நம்மைப் படைத்தவன்


என்றென்றும் உயிரோடிருப்பவன்


எந்தத் தேவைகளும் இல்லாதவன்


நினைத்ததைச் செய்ய வல்லவன்


எந்தப் பலவீனமும் அற்றவன்


ஆகிய தகுதிகள் ஒருங்கே அமையப் பெற்ற இறைவனிடம் மட்டுமே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று தெள்ளத் தெளிவாக இஸ்லாம் அறிவுறுத்துகிறது.


இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்வதற்கு எந்த நியாயமுமில்லை. அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பதையெல்லாம் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடக் கூறுகிறான். எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது.


அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!


கருத்துகள்