வாழ்க்கை அழகாக மாறும் !!”

 

அனைத்து சிக்கலுக்கும் ஒரே வைத்தியம்..  - அப்பாவிடம் எல்லாவற்றிற்குமே ஒரே வைத்தியம் தான் இருக்கும். உங்களுக்கு எவ்வளவு பெரிய வியாதியாக இருந்தாலும் அவர் இதைத்தான் சொல்வார். இதை மட்டும்தான் சொல்வார்."தலகாணி இல்லாம வெறும்தரைல படு, சரியாகிடும்"உலகின் அத்தனை வலிகளுக்கும் சர்வலோக நிவாரணி இந்த ஒன்றைத்தவிர வேறேதும் இல்லையென்பது அவரின் ஆணித்தரமான நம்பிக்கை. இதன் விசித்திரம் என்னவெனில் உடம்பிற்கு மட்டுமல்ல, மனதிற்குமான வைத்தியமாகவும் அவர் இதைத்தான் பரிந்துரைப்பார்.மனைவியை இழந்த எதிர்வீட்டு முதியவரின் புலம்பலுக்கு "வெறும் தரைல படுங்க, பாரம் குறையும்" என்று ஜஸ்ட் லைக் தட் அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது தான் இதை கவனிக்க ஆரம்பித்ததாக ஞாபகம்.பின்னொரு நாளில், கடன் தொல்லையென விரக்தியாய் புலம்பிய உறவினனுக்கு, வேலைப்பளுவென எரிந்து விழுந்த நண்பனுக்கு என பட்டியல் சன்னமாய் நீளும்.பின் எப்போதாவது "தலகாணி வேண்டாம் இந்துமா, கொஞ்ச நேரம் இப்டி படுத்துக்குறேன், அம்மாகிட்ட டீ போட சொல்லு" என்றபடி படுத்துக்கொள்வார். ஏதோ புரிந்ததுபோல் இருக்கும்."முதுகுவலி, தலைவலிக்குப் பரவாயில்ல, மனசு பாரத்துக்குக் கூடவா? வேடிக்கையா இல்லையாப்பா?"ஆர்வம் தாங்காமல் கேட்டதும் அவரிடமிருந்து மிக நிதானமாக பதில் வந்தது."தலைக்கு ஆதரவா எதையாவது தேடும்போதுதான் மனசு பலவீனப்படும், இந்துமா... யாராவது தொட்டு ஆசீர்வாதம் பண்ண மாட்டாங்களானு, யாராவது ஆறுதலா கோதிவிட மாட்டாங்களானு, யாராவது அழுறதுக்கு மடி தரமாட்டாங்களானு, யாராவது நான் இருக்கேன்னு சாய்ச்சுக்க மாட்டாங்களானு.. மனசு ஏங்கிக்கிடக்கும். எல்லாத்தையும் கொஞ்ச நேரம் தள்ளிவச்சுட்டு, வெறும் தரைல நிராதரவா, அநாதையா தலையை, அதாவது மனசை கொஞ்ச நேரம் வச்சுப்பாரு, அடுத்து என்னனு யோசிக்கத் தோணும். எப்படி வெளில வரலாம்னு சிந்தனை ஓடும். சரி, ரொம்ப நேரமாச்சுனு எழுந்து போக, அதாவது கடந்துபோகத் தோணும். தலகாணிங்குறது வெறும் பஞ்சு மட்டுமில்ல, நம்மை பலவீனப்படுத்துற வஸ்துவும் கூட. உடம்பை மட்டுமில்ல, மனசையும் காப்பாத்திக்குறது ரொம்ப முக்கியம்."என் அனுபவத்தில் சொல்றேன்...“எதையும் எதிர்பாராமல் வாழ்ந்து பாருங்க,வாழ்க்கை அழகாக மாறும் !!”

கருத்துகள்